பூஜையுடன் தொடங்கியது மோகன்லால் - மம்முட்டியின் படப்பிடிப்பு
|மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி. இவர்கள் இருவரும் "அதிராத்ரம் , அனுபந்தம், வர்தா, கரியில காட்டு போல" உள்ளிட்ட 7 பாடங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.
இந்த படம் அவர்கள் இணையும் 8வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை 'டேக் ஆப்', 'மாலிக்' படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாசில், குஞ்சக்கோ போபன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் இப்படத்தில் பிளாஷ்பேக் காட்சி ஒன்றுக்காக டி-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள சினிமாவின் இருபெரும் ஆளுமைகளாகக் கருதப்படும் நடிகர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மோகன்லாலும் மம்முட்டியும் இணைந்து இறுதியாக நடித்த படம் 'டிவெண்டி : 20' என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஐதராபாத், டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 150 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.