16 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மம்முட்டி - மோகன்லால்; படப்பிடிப்பு துவக்கம்
|மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவரும் இதற்கு முன் அதிராத்ரம் (1984), அனுபந்தம் (1985), வர்தா (1986), கரியில காட்டு போல (1986), அடிமகள் உடமகள் (1987), ஹரிகிருஷ்ணன்ஸ் (1998), டுவென்ட்டி 20 (2008) ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில 16 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த படம் அவர்கள் இணையும் 8வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்காக மம்மூட்டி 100 நாட்களும், மோகன்லால் 30 நாட்களும் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை 'டேக் ஆப்', 'மாலிக்' படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், குஞ்சக்கோ போபன் ஆகியோர் கலந்துகொண்டு நடித்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக மம்முட்டி கம்பெனி நிறுவனம் இவர்கள் இணைந்திருக்கும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும் பிளாஷ்பேக் காட்சி ஒன்றுக்காக டி-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள சினிமாவின் இருபெரும் ஆளுமைகளாகக் கருதப்படும் நடிகர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, மம்மூட்டி அவரின் தயாரிப்பிலேயே ஒரு படத்தில் நடித்து வருகிறார். விநாயகன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மம்மூட்டி வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.அதேபோல், நடிகர் மோகன்லால் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார்.