மறைந்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவை பாராட்டிய மோடி - நன்றி தெரிவித்த நாகார்ஜுனா
|‛மன் கீ பாத்' நிகழ்ச்சியில் மறைந்த தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவை மோடி நினைவுக்கூர்ந்தார்
ஐதராபாத்,
பிரதமர் மோடி 2014ல் இருந்து ‛மன் கீ பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் 118 வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் நேற்று பேசினார்.
அதில், மறைந்த தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவை நினைவுக்கூர்ந்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'தெலுங்கு சினிமாவுக்கு அக்கினேனி நாகேஸ்வர ராவ் அளித்த பங்களிப்பு மிகப்பெரியது. தனது படங்களின் மூலம் தெலுங்கு சினிமாவில் என்றும் அழியாத முத்திரையை பதித்தவர் அவர். அவரது படங்கள் இந்திய மரபுகள் மற்றும் மதிப்புகளை வெளிப்படுத்தின' என்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பாராட்டுக்கு அக்கினேனி நாகேஸ்வர ராவின் மகனும் நடிகருமான நாகார்ஜுனா, நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நாகார்ஜுனா வெளியிட்டுள்ள பதிவில், 'எனது தந்தை (அக்கினேனி நாகேஸ்வர ராவ்) ஏ.என்.ஆரை அவரது நூற்றாண்டு விழாவில் பாராட்டியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாக சைதன்யா, 'தெலுங்கு திரைப்படத் துறையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த ஏ.என்.ஆர் பற்றிய உங்களின் அற்புதமான வார்த்தைகளுக்கு நன்றி மோடி ஜி. உங்களைப் போன்ற ஒருவரிடமிருந்து இந்த வார்த்தைகளை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இதனை நடிகையும், நாக சைதன்யாவின் மனைவியுமான சோபிதா துலிபாலாவும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.