'மோடி பயோபிக்' - 'உள்ளதை உள்ளபடி எடுத்தால்... '- சத்யராஜ்
|பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிப்பதற்காக யாரும் என்னை அணுகவில்லை என்று சத்யராஜ் கூறினார்.
சென்னை,
ரோமியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி, சத்யராஜ் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சத்யராஜ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது,
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிப்பதற்காக யாரும் என்னை அணுகவில்லை. என் நண்பன் மணிவண்ணன் இயக்கியிருந்தால் தத்ரூபமாக இருக்கும். அவர் உள்ளதை உள்ளபடியே எடுப்பார். அப்படியே நடித்தால் வெற்றிமாறன் ,பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் எடுத்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன். ரஜினியின் கூலி படத்தில் நான் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், சல்மான்கான் படத்தில் நடிக்கிறேனா இல்லையா என்பது பற்றி இப்போது பேசமுடியாது. இவ்வாறு கூறினார்.