சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ' திரைப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். 'ஆயுத எழுத்து' என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் தயாரித்து நடித்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது, என் ராஜசேகர் இயக்கத்தில் 'மிஸ் யூ' என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாப்ள சிங்கம் , களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களை இயக்கிய என் ராஜசேகர் இயக்கியுள்ளார் . இப்படத்திற்கு இயக்குனருடன் இணைந்து அசோக் ஆர் வசனம் எழுதியுள்ளார். இதற்கிடையில் படத்தின் 3 பாடல்கள் வெளியாகி வைரலானது.
ஒரு இளைஞன் தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை, தீவிரமாகக் காதலிக்கிறான் ஏன் ? எப்படி? எதற்கு? தனக்குப் பிடிக்கவில்லை எனும்போதும், நாயகன் ஏன் காதலிக்கிறான் எனும் கேள்விக்குப்பின்னால் உள்ள சுவாரஸ்யம்தான் இந்தப்படத்தின் கதை. ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்கு டி சீரிஸ் பெற்றுள்ளது.இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
'மிஸ் யூ' திரைப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. உலகமெங்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.