முன்பு ஓட்டலில் வேலை...தற்போது பான்-இந்திய நடிகர்
|ஒரு படத்தில் நடித்ததன் மூலம் கன்னட சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர்.
சென்னை,
எந்த ஒரு திரைப்பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து தற்போது பான்-இந்திய நடிகராக உயர்ந்துள்ளார். ஒரு படத்தில் நடித்ததன் மூலம் கன்னட சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர்.
அது வேறு யாரும் இல்லை தற்போது வெற்றிகரமான நடிகரும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களிலும் வாழும் 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டி.
நடிகர் ரிஷப் ஷெட்டி 1983 -ம் ஆண்டு ஜூலை 7 ம் தேதி தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூரு நகரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை கர்நாடகாவில் முடித்து, பின்னர் பெங்களூரு விஜயா கல்லூரியில் சேர்ந்தார்.
சிறுவயதிலிருந்தே, நடிப்பில் ஆர்வம் கொண்ட ரிஷப் ஷெட்டி கல்லூரியில் படிக்கும்போதே நாடகங்களில் நடித்து பாராட்டப்பட்டார்.
அவர் தனது இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்தபோது திரைப்படம் பார்க்க, எப்போதும் அப்பாவிடம் பணம் கேட்க முடியாது என்பதால் சிறு சிறு வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளார்.
தண்ணீர் கேன் போடுவது, ஓட்டலில் வேலை செய்வது என அனைத்து வேலைகளையும் செய்துள்ளார். பின்னர் நடிகராக ஆசைப்பட்டுள்ளார். ஆனால், எந்த தொடர்பும் இல்லாததால் எவ்வாறு அணுகுவது என்பது தெரியாமல் இருந்திருக்கிறார். பின்னர் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து சுமார் 6-7 வருடங்களுக்கு பிறகு 'துக்ளக்' படத்தில் வில்லனாக நடித்து சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
2022-ம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்த கன்னட படமான 'காந்தாரா' படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது. இப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் ரிஷப் ஷெட்டி பிரபலமானார். தற்போது பான் - இந்திய நடிகராக இருக்கிறார்.