ஹிருத்திக் ரோசனை இயக்க விரும்பும் மார்கோ நடிகர்
|உன்னி முகுந்தன், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை வைத்து படம் இயக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
சென்னை,
நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்து கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'சீடன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சூரி நடிப்பில் வெளியான 'கருடன்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் உன்னி முகுந்தன்.
இவர் தற்போது 'மார்கோ' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.கடந்த மாதம் 20ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய உன்னி முகுந்தன், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோசனை வைத்து படம் இயக்க விரும்புவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"நான் நிறைய ஆக்சன் படங்களை பார்த்து வளர்ந்தவன். இதனால், எனக்கு ஆக்சன் ஹீரோக்களை மிகவும் பிடிக்கும். அதன்படி, ஹிருத்திக் ரோசனை ரொம்ப பிடிக்கும். அவரை ஒருமுறை மும்பையில் சந்தித்தேன். அவரை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசை. ஒருநாள் அது கண்டிப்பாக நடக்கும் ' என்றார்.