< Back
சினிமா செய்திகள்
கூரன் திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும் -  மேனகா காந்தி
சினிமா செய்திகள்

'கூரன்' திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும் - மேனகா காந்தி

தினத்தந்தி
|
19 Dec 2024 5:14 PM IST

மனிதர்களை விலங்குகள் அறியும், விலங்குகளை மனிதர்கள் அறிய மாட்டார்கள் என்று 'கூரன்' திரைப்பட விழாவில் மேனகா காந்தி கூறியுள்ளார்.

சென்னை,

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.

விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது.

'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக விலங்குகள் உரிமைகள் செயல்பாட்டாளர் மேனகா சஞ்சய் காந்தி கலந்து கொண்டார்.

திரைப்படத்தின் இசையை வெளியிட்டு விட்டு, விழாவில் அவர் பேசும் போது, " திரைப்படத்தில் சிறிய திரைப்படம் என்று எதுவும் இல்லை. இது பெரிய கருத்தை, சிந்தனையை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அனைத்து உயிரினங்களும் ஒன்று என்று சொல்கிறது. உயிரினம் ஒவ்வொன்றும் சோகத்தை உணர்கிறது, மகிழ்ச்சியை உணர்கிறது, பயத்தை உணர்கிறது. வாழ விரும்புகிறது. அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறது.

விலங்குகள் அனைத்திற்கும் ஒரு மொழி உள்ளது. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. அவை அனைத்தையுமே மனிதர்களைப் புரிந்து வைத்துள்ளன. ஆனால் நாம்தான் அவைகளைப் புரிந்து கொள்வதில்லை. விலங்குகளின் மகிழ்ச்சியையும், வலிகளையும் பார்க்கும்போது, அது நம்முடையதாக உணர வேண்டும். நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான் இந்தப் படம் முழுமையாக வெளிப்படுத்துகிறது. இந்தப் படம் நாயின் உரிமை வழக்கு பற்றிப் பேசுகிறது. அனைத்து உயிரினங்களும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். 'கூரன்' திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும் " என்றார்.

படத்தில் பிரதான வேடம் ஏற்றுள்ள நாய் ஜான்சியும் விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்