ஜூனியர் என்டிஆரின் 31-வது படத்தில் இணையும் மலையாள பிரபலங்கள்
|பிரசாந்த் நீல் இயக்க உள்ள பிரம்மாண்டமான படத்தில் இரண்டு மலையாள பிரபலங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜூனியர் என்டிஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படம் 'தேவரா'. இந்த படம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
அதனை தொடர்ந்து, ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அடுத்ததாக தனது 31-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'என்டிஆர்31' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தினை நந்தமுரி தரகா இராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. இப்படம் 2026-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக உள்ள, இப்படத்தில் நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் இரண்டு பிரபலமான மலையாள நடிகர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிஜு மேனன் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.