பாலியல் புகாரில் இருந்து மலையாள நடிகர் நிவின் பாலி விடுவிப்பு
|நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.
எர்ணாகுளம்,
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. சமீபத்தில் இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையின் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இது தொடர்பான விசாரணை அறிக்கையில் புகார்தாரர் (நிவின் பாலி) குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிவின் பாலிக்கு எதிரான குற்றச்சாட்டில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அவர் பாலியல் புகாரில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதனால் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் போலி என உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து நிவின் பாலி சமூக வலைதளத்தில் இது குறித்த பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவரின் அன்புக்கும், பிராத்தனைக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.