'கல்கி 2898 ஏடி': கமல்ஹாசன் மறுத்திருந்தால் வில்லனாக யார் நடித்திருப்பார் தெரியுமா?
|'கல்கி 2898 ஏடி' படத்தில் நடிக்க கமல்ஹாசன் மறுத்திருந்தால் யார் நடித்திருப்பார் என்பது குறித்து குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், தமிழ் திரையுலகில் (கோலிவுட்) 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவ்வாறு இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய கமல்ஹாசன், 1959-ம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
தனது 65 ஆண்டு கால தமிழ் சினிமா வாழ்க்கையை நிறைவு செய்துள்ள கமல்ஹாசன் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படம் ரூ. 1,050 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், ஒருவேளை இப்படத்தில் நடிக்க கமல்ஹாசன் மறுத்திருந்தால் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலிடம் படக்குழு பேசியிருக்கும் என்று படக்குழு உறுப்பினர் வேணுகோபால் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'அமிதாப் பச்சன் அஸ்வத்தாமாவாகவும், பிரபாஸ் பைரவாவாகவும் நடிப்பார்கள் என்பது ஆரம்பத்திலேயே முடிவெடுக்கப்பட்டது. யாஸ்கின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பதில்தான் ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்தது. ஏனெனில் இந்த மூன்று கதாபாத்திரங்களும் நடிகர்களுடன் ஒத்துப்போக வேண்டும். பின்னர் இந்த கதாபாத்திரத்திற்கு மோகன்லால் சார் பரிசீலிக்கப்பட்டார், ஆனால் இறுதியில் கமல் சார் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது, என்றார்.