வசூலில் 'அரண்மனை 4' படத்தை முந்திய 'மகாராஜா' - எவ்வளவு தெரியுமா?
|வசூலில் 'மகாராஜா' திரைப்படம் 'அரண்மனை 4' படத்தை முந்தியுள்ளது.
சென்னை,
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
படத்திற்குக் கிடைத்த பெரிய வரவேற்பால் பல திரையரங்குகளில் மகாராஜாவுக்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டில் வெளியான படங்களில் இப்படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெரும் என்றே கணிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது 'கல்கி 2898 ஏடி' படத்தை தவிர்த்து இந்தாண்டு தமிழில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக இருந்த 'அரண்மனை 4' படத்தை 'மகாராஜா' முந்தியுள்ளது. அதன்படி, மகாராஜா திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரண்மனை 4 படம் ரூ. 99 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.