< Back
சினிமா செய்திகள்
மெட்ராஸ்காரன் படத்தின் 2வது  பாடல் அப்டேட்
சினிமா செய்திகள்

'மெட்ராஸ்காரன்' படத்தின் 2வது பாடல் அப்டேட்

தினத்தந்தி
|
6 Dec 2024 9:40 PM IST

‘மெட்ராஸ்காரன்’ படத்தின் அடுத்த பாடலான ‘காதல் சடுகுடு’ பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர் வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார்.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். சிறு சம்பவம் பெரும் பிரச்சினையாக, மாறி இருவர் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை திரில்லர் பாணியில் சொல்லும் படமாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'மெட்ராஸ்காரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இருந்து 'தை தக்க கல்யாணம்' எனும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை கபில் கபிலன் மற்றும் அபர்ணா ஆகிய இருவரும் பாடியிருக்கும் நிலையில் இளன் இந்த பாடல்வரிகளை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான 'காதல் சடுகுடு' பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடல் மணி ரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி நடித்து வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் இடம் பெற்ற காதல் சடுகுடு பாடலின் ரீமேக் வெர்ஷனாகும். இதனால் ரசிகர்களிடையே பெறும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்பாடலின் ஒரு புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்