< Back
சினிமா செய்திகள்
காஜல் அகர்வாலை மும்பையில் சந்தித்து பேசிய நடிகர் சூர்யா
சினிமா செய்திகள்

காஜல் அகர்வாலை மும்பையில் சந்தித்து பேசிய நடிகர் சூர்யா

தினத்தந்தி
|
19 Oct 2024 4:43 PM IST

மும்பை விமான நிலையத்தில் நடிகை காஜல் அகர்வாலை அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் சந்தித்துள்ளார் நடிகர் சூர்யா.

மும்பை,

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். அடுத்தது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யா தவிர, திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தினை ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற புரமோஷனில் சூர்யா கலந்துகொண்டபோது, ரசிகர்கள் அவரை சூழ்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். நடிகர் சூர்யாவும் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ந் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மும்பையில் புரமோஷன் பணிகள் நடைபெற்ற நிலையில் இன்னும் பல நாடுகளில் புரமோஷனை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் நடிகை காஜல் அகர்வாலை அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் சந்தித்துள்ளார் சூர்யா. இது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நடிகர் சூர்யா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் இணைந்து மாற்றான் திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜல், தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த போதே, தொழில் அதிபர் கவுதம் கிச்சலு என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டார்.தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.

மேலும் செய்திகள்