< Back
சினிமா செய்திகள்
கூலி படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்
சினிமா செய்திகள்

"கூலி" படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்

தினத்தந்தி
|
14 March 2025 2:28 PM IST

இயக்குனர் லோகேஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'கூலி' தயாரிப்பு நிறுவனம் பிறந்தநாள் வீடியோவை பகிர்ந்துள்ளது.

சென்னை,

'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி நடித்த 'கைதி', விஜய்யின் 'மாஸ்டர்', கமல்ஹாசனின் 'விக்ரம்' படங்களை டைரக்டு செய்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலானது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது பிறந்தநாளை கூலி படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது சாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

லோகேஷ் பிறந்தநாளை முன்னிட்டு கூலி தயாரிப்பு நிறுவனம் பிறந்தநாள் வீடியோவை பகிர்ந்துள்ளது. நவீன சினிமாவை மாற்றியமைத்தவர் என சன் பிக்சர்ஸ் லோகேஷ் கனகராஜை வாழ்த்தியுள்ளது.

இன்று லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் என்பதால் கூலி படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்