சமந்தா, தமன்னாவை போல ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரியங்கா மோகன்...
|'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு பிரியங்கா மோகன் நடனமாடியுள்ளார்.
சென்னை,
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்தபடத்தில் சமந்தா 'ஓ சொல்றியா மாமா' என்கிற பாடலுக்கு நடனமாடியிருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு சமந்தாவின் நடனமும் முக்கிய காரணமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நடிகை தமன்னா 'காவாலயா' என்ற பாடலுக்கு நடனமாடி இந்த படத்தின் வெற்றிக்கு உதவியிருந்தார்.
தற்போது, 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தில் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பிரியங்கா மோகன் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடியுள்ளார். இந்த படத்தினை நடிகர் தனுஷ் இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமந்தா, தமன்னாவை தொடர்ந்து தற்போது நடிகை பிரியங்கா மோகனும் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷுடன் இணைந்து 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நடிகர் தனுஷ் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' விரைவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். இது குறித்து நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு, கேமியோ ரோலில் நடித்ததற்கு தனுஷ் நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.