< Back
சினிமா செய்திகள்
கன்னட பிக்பாஸிலிருந்து விலகும் நடிகர் கிச்சா சுதீப்
சினிமா செய்திகள்

கன்னட பிக்பாஸிலிருந்து விலகும் நடிகர் கிச்சா சுதீப்

தினத்தந்தி
|
15 Oct 2024 4:26 PM IST

கன்னட பிக்பாஸில் தற்போது நடைபெற்று வரும் 11-வது சீசன் தான் தனது கடைசி சீசன் என நடிகரும், பிக்பாஸ் தொகுப்பாளருமான கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் 2013-ல் தொடங்கியது. அப்போதிலிருந்து கிச்சா சுதீப்தான் தொகுத்து வழங்குகிறார். கிட்டத்தட்ட 11 ஆண்டு பயணம் நடப்பு சீசனுடன் முடிவுக்கு வருவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிச்சா சுதீப் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: "11 ஆண்டுகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்தப் பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. தற்போது நான் அடுத்து நான் செய்ய விரும்பும் செயல்களை நோக்கி நகர விரும்புகிறேன். நடப்பு சீசன் தான் பிக்பாஸில் நான் தொகுத்து வழங்கும் கடைசி சீசன். என்னுடைய முடிவுக்கு கலர்ஸ் தொலைக்காட்சியும், இத்தனை ஆண்டுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பின் தொடரும் மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி. தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சியின் தர மதீப்பிடு நீங்கள் என் மீதும் நிகழ்ச்சி மீதும் கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்துகிறது. அனைவரும் இணைந்து இந்த சீசனை சிறப்பானதாக மாற்றுவோம். நானும் சிறந்த முறையில் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என உறுதியளிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும், கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 9.9 என்ற அதிக ரேட்டிங்கை பெற்ற நிகழ்ச்சி என்ற பெருமையை பிக்பாக்ஸ் நிகழ்ச்சி பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும் கிச்சா சுதீப் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்