பிரபல கன்னட நடிகருக்கு பிரதமர் மோடி கடிதம்
|கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் மறைவையொட்டி பிரதமர் மோடி ஆறுதல் கடிதம் அனுப்பியுள்ளார்.
பெங்களூரு,
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் 'நான் ஈ' உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் `கிச்சா' சுதீப். 2013 முதல் 10 வருடங்களாகக் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் சுதீப், தற்போது சென்றுகொண்டிருக்கும் பிக் பாஸ் சீஸனோடு நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாகக் கடந்த வாரம்தான் அறிவித்திருந்தார்.
சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக் குறைவால் கடந்த 20ம் தேதி காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். கன்னட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து சுதீப்புக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து கிச்சாச் சுதீப் தனது தாயார் குறித்து உருக்கமாக ஒரு நீண்ட பதிவை தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், "என் வாழ்க்கையில் முதன் முறையாக உதவியற்ற ஒரு சூழலை நான் எதிர்கொள்கிறேன். என் அம்மா சுய நினைவில் இருக்கும்போது என்னால் அவரை பார்க்க முடியவில்லை. சில மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. என் வாழ்வின் விலைமதிக்க முடியாத ஒன்று என்னை விட்டு சென்றுவிட்டது" என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கிச்சா சுதீப்பிற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை கிச்சா சுதீப், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "இந்த கடினமான நேரத்தில் உங்களின் சிந்தனைமிக்க வார்த்தைகள் ஆறுதலை அளிக்கின்றன" எனக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. நட்சத்திர பேச்சாளராக கிச்சா சுதீப் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.