< Back
சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு கே.ஜி.எப் பட நடிகர் வேண்டுகோள்
சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு 'கே.ஜி.எப்' பட நடிகர் வேண்டுகோள்

தினத்தந்தி
|
31 Dec 2024 3:03 PM IST

தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் பொறுப்புடன் கொண்டாட வேண்டும் என நடிகர் யாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'கே.ஜி.எப்.' படத்தில் கதாநாயகனாக நடித்து பான் இந்திய நடிகராக உயர்ந்தவர் யாஷ். கே.ஜி.எப்.படத்தின் 2-ம் பாகமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதையடுத்து நடிகர் யாஷ்-க்கு கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவானது. அதை தொடர்ந்து யாஷ் தற்போது 'டாக்ஸிக்' மற்றும் ராமாயணம் படங்களில் நடித்து வருகிறார். இதில் ராமாயணம் படத்தில் ராவணனாக யாஷ் நடிக்கிறார்.

நடிகர் யாஷ் வரும் ஜனவரி 8-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் பொறுப்புடன் கொண்டாட வேண்டும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாஷ், "என் அன்பான நலம் விரும்பிகளுக்கு, புதிய ஆண்டு உதயமாவது என்பது, பிரதிபலிப்பு, தீர்மானங்கள் மற்றும் ஒரு புதிய திட்டத்தை பட்டியலிடுவதற்கான நேரம். பல ஆண்டுகளாக நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பு அளவில்லாதது. ஆனால், கடந்த ஆண்டு சில அசம்பாவித சம்பவங்களும் நடந்துள்ளன.

குறிப்பாக என் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று வரும்போது, நம் அன்புமொழியை மாற்ற வேண்டிய நேரம் இது. உங்கள் அன்பின் வெளிப்பாடு ஆடம்பரமான நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் இருக்கக்கூடாது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை அறிவது, உங்கள் இலக்குகளை அடைவது மற்றும் மகிழ்ச்சியை பரப்புவதுதான் எனக்கு மிகப்பெரிய பரிசு.

என்னுடைய பிறந்தநாளில் நான் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பேன், ஊரில் இருக்க மாட்டேன். இருப்பினும், இருப்பினும் உங்களின் அன்பும் அரவணைப்பும் என்னை எப்போதும் வந்து சேரும். அது என்னை ஊக்குவிக்கும்.பாதுகாப்பாக இருங்கள், உங்கள் அனைவருக்கும் 2025ம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார் யாஷ்.

கடந்த ஆண்டு நடிகர் யாஷின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்