4 நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த கேரள நடிகை
|கேரள நடிகை ஒருவர் கொல்லம் எம்.எல்.ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் பல நடிகைகள் தற்போது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். சமீபத்தில், மேற்கு வங்காள நடிகை ஸ்ரீ லேகா மித்ரா, மலையாள நடிகரும், இயக்குனரும், கேரள திரைப்பட அக்காடமியின் தலைவருமான ரஞ்சித் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்ததையடுத்து, கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் ரஞ்சித் ராஜினாமா செய்தார்.
மேலும், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகையும், மாடலுமான ரேவதி பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவியை நடிகர் சித்திக் ராஜினாமா செய்தார். இவ்வாறு, பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருவது கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கேரள நடிகை ஒருவர் கொல்லம் எம்.எல்.ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக கொல்லத்தில் உள்ள முகேஷ் இல்லத்தை நோக்கி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் படி பேரணி நடத்தப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து, விரிவான விசாரணை தேவைப்படுவதாக நடிகர் மணியன்பிள்ளை ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'சிலர் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில், நிரபராதி மற்றும் குற்றவாளிகள் என இருவருமே இருப்பார்கள். எனவே, விரிவான விசாரணை அவசியம்' என்றார்.