கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா' டைட்டில் டீசர் வெளியீடு
|நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
கடந்த ஆண்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று (அக்டோபர் 17) தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிடுள்ளது.
டீசரில், மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு இருக்கும் கீர்த்தி சுரேஷின் ஹேண்ட் பேக்கை ஒரு கும்பல் திருடி செல்கின்றனர். பின் அந்த பேக்கிற்குள், துப்பாக்கி, வெடி குண்டு, கத்தி என எல்லாம் இருக்கிறது. பேக்கை திருடிய கும்பல் இதைப் பார்த்து அலறுகின்றனர். அப்பொழுது பேக்கை வாங்க கதவை உடைத்துக் கொண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். யார் நீ என்ற கேள்வியுடன் டைட்டில் போஸ்டர் வருகிறது.
இந்த டைட்டில் டீசரின் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.