தீபாவளி ரேஸில் அமரன், லக்கி பாஸ்கருடன் இணைந்த கவினின் 'பிளடி பெக்கர்'
|'பிளடி பெக்கர்' படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போனநிலையில் படக்குழு தீபாவளியை குறி வைத்திருக்கிறது.
சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'அமரன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், நடிகர் துல்கர் சல்மான் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செவுத்ரி நடித்திருக்கிறார். ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தை வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். இப்படம் செப்டம்பர் 27 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இப்படம் வருகிற அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இதனையடுத்து, நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'லக்கி பாஸ்கர்' திரைப்படமும் சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படமும் தீபாவளி ரேஸில் மோத உள்ளது. இந்நிலையில், இந்த ரேசில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'பிளடி பெக்கர்' படமும் இணைந்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். தொடர்ந்து, இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனநிலையில், படக்குழு தீபாவளியை குறி வைத்திருக்கிறது.