< Back
சினிமா செய்திகள்
விரைவில் கைதி 2 திரைப்படம் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
சினிமா செய்திகள்

விரைவில் 'கைதி 2' திரைப்படம் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

தினத்தந்தி
|
25 Oct 2024 4:51 PM IST

‘கைதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக கடந்த 2019-ல் வெளியான திரைப்படம் 'கைதி'. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. நடிகர் கார்த்தி மனதில் நிற்கும்படியான ரோலில் நடிக்க கதாநாயகி, பாடல் என எதுவுமே இல்லாமல், கார்த்தியை இதற்குமுன் பார்த்திடாத ஒரு பரிணாமத்தில் காட்டிய படம் 'கைதி'.

கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்திற்குப் பின்பே லோகேஷ் கனகராஜ் பிரபலமடைந்தார். தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.


இந்த நிலையில், கைதி திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது. கார்த்திக் மற்றும் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி. இவர்களால்தான் 'லோகேஷ் யுனிவர்ஸ்' சாத்தியமானது. விரைவில் டில்லி திரும்ப வருவார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம், கூலி திரைப்படத்துக்கு பிறகு கார்த்தியின் கைதி 2-ஆம் பாகத்தை இயக்கவுள்ளதை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

நடிகர் கார்த்தி 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். அதனை முடித்துவிட்டு 'கைதி 2' படப்பிடிப்பில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்