மாரி செல்வராஜின் அடுத்த உண்மை கதையில் கார்த்தி !
|மாரி செல்வராஜின் தந்தையுடைய வாழ்க்கை கதையில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
பிரபல இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்தவர் மாரி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'கர்ணன், மாமன்னன்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்து வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான 'வாழை' படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து இவரது அடுத்த படம் பற்றி ரசிகர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அது குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, மாரி செல்வராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது மாரி செல்வராஜின் தந்தையுடைய வாழ்க்கை கதை என்பதை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
இப்படத்தின் ஒன் லைனை கார்த்தியிடம் ஏற்கனவே மாரி செல்வராஜ் தெரிவித்து இருப்பதாகவும், அதற்கு கார்த்தி ஒப்புக் கொண்டுள்ள நிலையில் விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாரி செல்வராஜ் மற்றும் கார்த்தி இருவருக்கும் நிறைய படங்கள் வரிசையாக இருப்பதால், அந்த படங்களை முடித்த பிறகு இந்த படம் கண்டிப்பாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.