'கில்' படத்தின் இரண்டாம் பாகத்தைத் திட்டமிடும் கரண் ஜோஹர்
|கடந்த ஆண்டு நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் 'கில்' படம் திரையிடப்பட்டது.
மும்பை,
பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் கரண் ஜோகர். இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், என பன்முகத் திறன் கொண்டவர். சமீபத்தில் இவர் தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் ஆக்சன் படமான 'கில்' படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் தன்யா மணிக்தலா, ராகவ் ஜுயல் மற்றும் லக்சயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்சன் திரில்லர் படமான இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, கீனு ரீவ்ஸ் நடித்த 'ஜான் விக்' தொடரை இயக்கிய 87 லெவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கில்' திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய கரண் ஜோஹர் 'கில்' படத்தின் இரண்டாம் பாகத்தைத் திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ' தற்போது 'கில்' படத்தின் இரண்டாம் பாகத்தைத் திட்டமிட்டுள்ளோம். முதல் பாகம் போலவே இதுவும் சர்வதேச வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் 'கில்' திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.