சொந்த ஊரை சினிமா நகரமாக மாற்ற விரும்பும் 'காந்தாரா' பட நடிகர்
|சொந்த ஊரை சினிமா நகரமாக மாற்றி ‘கெரடி பிலிம் சிட்டி’ என்ற பெயர் சூட்ட விரும்புவதாக ‘காந்தாரா’ பட நடிகர் ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.
கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் 'காந்தாரா'. இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் 'பஞ்சுருளி' என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதில் ரிஷப் ஷெட்டி ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 'காந்தாரா சாப்டர் 1' என்று பெயரிட்டு படப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டன. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
ரிஷப் ஷெட்டிக்கு தனது சொந்த ஊரான உடுப்பி தாலுகாவில் உள்ள கெரடி கிராமத்தில் தன்னுடைய படங்களின் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என ரொம்பவே விருப்பம் இருந்தது. பலமுறை லொகேஷன்கள் பார்த்தாலும் அது கைகூடாமல் போனது. அதேநேரம் காந்தாரா படத்தை தனது சொந்த ஊரில் உள்ள வனப்பகுதியிலேயே பெரும்பாலான படப்பிடிப்பை நடத்தி தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார் ரிஷப் ஷெட்டி. இந்த இரண்டாம் பாகமும் பெரும்பாலும் அதே பகுதியில் தான் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ராணா நடத்தும் டாக் ஷோவில் பங்கேற்ற ரிஷப் ஷெட்டி கூறும்போது, "எனது சொந்த ஊரை ஒரு சினிமா நகரமாக மாற்ற விரும்புகிறேன். அதற்கு 'கெரடி பிலிம் சிட்டி' என்றும் மனதிற்குள் பெயர் வைத்திருக்கிறேன். இந்தப் பகுதியில் பெரிய அளவில் படங்கள் உருவானதில்லை. ஆனால் காந்தாரா இந்த பகுதியை பிரபலப்படுத்தி விட்டது" என்று கூறியுள்ளார்.