கொண்டாட்டத்திற்கான நேரத்தில் தற்போது உலகம் இல்லை - நடிகை கனி குஸ்ருதி
|கொண்டாட்டத்திற்கான சரியான நேரத்தில் தற்போது உலகம் இல்லை என்று நடிகை கனி குஸ்ருதி கூறினார்.
சென்னை,
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மாதம் நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட பல இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டன. இதில் பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம் போட்டியிட்டு கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது.
இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இவ்விழாவில் நடிகை கனி குஸ்ருதி வெள்ளை நிற ஆடையில் தர்பூசணி கிளட்சுடன் கலந்துகொண்டார். இந்நிலையில், இவ்விழாவில் கலந்துகொண்டது குறித்து கனி குஸ்ருதி கூறுகையில்,
கடந்த ஆண்டு முதல் பல விஷயங்கள் நடந்து வருகின்றன. கொண்டாட்டத்திற்கான நேரத்தில் தற்போது உலகம் இல்லை. கேன்ஸ் விழாவில் கலந்துகொள்ள முதலில் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் பாலஸ்தீனர்களின் நிலை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. கேன்ஸ் விழாவில் ஒற்றுமையை உணர்த்தும் விதமாக பலர் பல விஷயங்களை செய்தனர். அப்போது கேன்ஸ் விழாவில் நானும் ஏதாவது செய்ய விரும்பினேன். அதனால், ஒற்றுமைக்காக வெள்ளை நிற ஆடையில் தர்பூசணி கிளட்சுடன் கலந்துகொண்டேன். இவ்வாறு கூறினார்.