'சிங்கம் 2' சாதனையை முறியடித்த 'கங்குவா' - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
|'கங்குவா' படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில், பெரிய படமாக உருவாகியுள்ள இப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் ஒரு பிரம்மாண்டமான படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், 'கங்குவா' படம் முதல் நாளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், இந்தியாவில் மட்டும் ரூ. 22 கோடி வசூலித்து, இதற்கு முன்பு இந்தியாவில் சூர்யாவின் சிறந்த ஓப்பனிங்காக இருந்த சிங்கம் 2 படத்தின் ரூ.12 கோடி வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
மேலும் கங்குவா, தமிழ் நாட்டில் ரூ.13.65 கோடியும், கேரளாவில் ரூ. 4 கோடியும், இந்தியில் ரூ. 3.25 கோடியும் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.