< Back
சினிமா செய்திகள்
கங்குவா படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு
சினிமா செய்திகள்

'கங்குவா' படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
23 Nov 2024 8:21 AM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 11500 திரையரங்குகளில் கடந்த 14-ந் தேதி வெளியானது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அதாவது பழங்குடியின மக்களில் ஒருவனாகவும், மற்றொன்றில் ஸ்டைலிஷான தோற்றத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

11ம் நூற்றாண்டு மற்றும் தற்காலத்தில் நடக்கும் காட்சிகள் 'கங்குவா' படத்தில் இடம் பெற்றுள்ளன. கங்குவா படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.60 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தான் சூர்யாவின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாகும். இப்படம் இதுவரை ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்