ஜப்பான் ஒசாகா பட விழா: கமல்ஹாசன், பகத் பாசில் , கீர்த்தி சுரேசுக்கு விருது
|2022-ல் வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஜப்பானில் தமிழ் படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறந்த தமிழ் நடிகர்-நடிகைகள், திரைப்படங்களை தேர்வு செய்து விருது வழங்குகிறார்கள்.
2022-ல் வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த நடிகர் விருது விக்ரம் படத்தில் நடித்த கமல்ஹாசனுக்கும் சிறந்த நடிகை விருது சாணிக்காயிதம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கும் வழங்கப்படுகிறது.
இதுபோல் சிறந்த டைரக்டர் விருது பொன்னியின் செல்வன் 1 படத்தை எடுத்த மணிரத்னத்திற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது அனிருத்திற்கும் வழங்கப்படுகிறது. சிறந்த திரைப்படமாக 'விக்ரம்' தேர்வாகி உள்ளது.
சிறந்த வில்லன் விருது விக்ரம் படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த துணை நடிகர் விருதை விக்ரம் படத்தில் நடித்த பகத் பாசில் பெறுகிறார். சிறந்த துணை நடிகைக்கான விருதை பொன்னியின் செல்வன் 1 படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் பெறுகிறார்.