< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

கமலின் 'குணா' ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
26 Nov 2024 4:12 PM IST

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'குணா' திரைப்படம் வருகிற 29ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ஜனகராஜ் உள்ளிட்டப் பலர் நடிப்பில்,1991-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் 'குணா'. 33 வருடங்கள் கடந்த பின்னரும் படத்தையும், அதன் பாடல்களையும் இன்றைய தலைமுறையினர் கொண்டாடிவருகின்றனர். குறிப்பாக, 'டெவில் கிச்சன்' என அழைக்கப்படும் குணா குகையில் படமாக்கப்பட்ட 'கண்மணி அன்போடு காதலன்...' பாடலும் இணையத்தைக் கலக்கியது.

இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் அஜய்ரத்தினம், எஸ். வரலட்சுமி , ரோஷினி, கிரீஷ் கர்னாட் , எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர்.

1991ம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த திரைப்படத்திற்கான மூன்றாவது பரிசை குணா வென்றது. கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு கமல்ஹாசனின் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.


இந்தப் படம் கடந்த ஜூன் 21ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியானது. படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாகக் கூறி, குணா படத்தை ரீ-ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். பதிப்புரிமை காலம் 2013ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டதால், ரீ-ரிலீஸ் செய்ய தடை கோர முடியாது என தயாரிப்பு நிறுவனங்களான பிரமிட், எவர்கிரீன் நிறுவன தரப்பு வாதம் செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ரீ-ரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கினர்.

இந்த நிலையில், திரைப்படம் வரும் 29 தேதி வெளியாகவுள்ளது. இதற்காக படத்தின் சிறப்பு டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்