'இது பேய் கதைதான்' - 'கொட்டுக்காளி' படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய கமல்ஹாசன்
|'கொட்டுக்காளி' படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை பாராட்டியுள்ளார்.
சென்னை,
`கூழாங்கல்' திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. இதற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து இயக்கியிருக்கிற திரைப்படம் 'கொட்டுக்காளி'. சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படம் பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.
இத்திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில்,
'கிராமம் என்றால், சிமெண்ட் சாலை, வாகன வசதி. செல்போன், டாஸ்மாக், சானிட்டரி நாப் 24 மணி நேர மின்சாரம் என 21-ஆம் நூற்றாண்டின் நவீன வசதிகள் நிறைந்த கிராமம் இருப்பினும் எங்க வீட்டு பிள்ளைக்குப் பேய் பிடிச்சுருக்கு பேய் ஓட்டக் கூட்டிப்போறோம்' என்று விசாரிப்பவர்களிடம் கூசாமல் சொல்கிறான் பாண்டியன் வழிமொழிகிறது குடும்பம்.
போகிற வழியெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள் விற்கும் வண்டி ஒன்று பேயாய் ஆடிச்செல்கிறது. கண்ணேறு தவிர்க்கும் அசுர முகங்கள் இன்னொரு வண்டியில் பேயாடுகிறது. நடுவழியில் டாஸ்மாக் பேய் என்று பல பேய்களின் ஆட்டம் தென்பட்டாலும் அவை பூசாரிகளால் விரட்ட முடியாத பேய்கள் எனப் புரிந்துகொள்கிறோம். இது பேய் கதைதான் காதல் பேய்க் கதை, நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது., இவ்வாறு தெரிவித்துள்ளார்.