'கமல்ஹாசன் உலக நாயகன் அல்ல, விண்வெளி நாயகன்' - நடிகர் ரோபோ சங்கர்
|நடிகர் அஜித்குமாரை தொடர்ந்து கமல்ஹாசன் எடுத்திருக்கும் முடிவு தமிழ் திரையுலகில் பேசுப்பொருளாகி உள்ளது.
சென்னை,
தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் உலக சினிமா ரசிகர்களால் 'உலக நாயகன்' என்று அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரை தொடர்ந்து கமல்ஹாசன் எடுத்திருக்கும் முடிவு தமிழ் திரையுலகில் பேசுப்பொருளாகி உள்ளது.
அதாவது நடிகர் கமல்ஹாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன், பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறக்கிறேன், பல கட்ட யோசனைகளுக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்த பேசிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், "அவரை கமலை உலக நாயகன் என்ற சிறிய கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை. அவர் விண்வெளி நாயகன் ஆவார். உலகத்திலேயே விண்வெளி நாயகன் என்பவர் ஒருவர் மட்டும் தான், அவர்தான் கமல்ஹாசன். வேறு யாருக்கும் இந்த தலைப்பை சொல்லவே முடியாது. அதனால் அவர் இனிவேல் உலகநாயகன் கிடையாது, இனிமேல் அடிக்கப்படும் போஸ்டர்களில் விண்வெளி நாயகன் என்று தான் குறிப்பிடப்படும். இனிமேல் அவரை நாங்கள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போகிறோம்" என்று கூறியுள்ளார்.