இந்தியன் 3-யை பாயாசத்தோடு ஒப்பிட்டு பேசிய கமல்ஹாசன்
|இந்தியன் 3-யை பாயாசத்தோடு ஒப்பிட்டு விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை,
நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இதில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர், விவேக், மனோபாலா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
வரும் 12-ம் தேதி இந்தியன் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பட விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், இந்தியன் 3 படத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் அதன் கதை சிறப்பாக இருந்ததால்தான் இந்தியன் 2-ல் கையெழுத்திட்டதாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து அவருக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், இந்தியன் 3-யை பாயாசத்தோடு ஒப்பிட்டு அதற்கு விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'நான் என்ன சொல்ல வருகிறேன் என்று மக்களுக்குப் புரியவில்லை. எனக்கு இந்தியன் 3 பிடித்திருக்கிறது என்றுதான் சொன்னேன். இந்தியன் 2 பிடிக்கவில்லை என்று அல்ல. இந்தியன் 3 க்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன், ஏனெனில் அதில் சில அம்சங்கள் மிகவும் அருமையாக உள்ளன. நீங்கள் சாம்பார் மற்றும் ரசத்தை விரும்பி சாப்பிடுவீர்கள், ஆனால் பாயசத்தை அதிகம் எதிர்பார்ப்பீர்கள், இல்லையா? அதேபோலதான் இதுவும். "என்றார்