'கல்கி 2898 ஏடி': ஜப்பான் செல்வதில் பிரபாசுக்கு ஏற்பட்ட சிக்கல்?
|அடுத்த மாதம் கல்கி 2898 ஏடி படம் ஜப்பானில் வெளியாக உள்ளது.
சென்னை,
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்தனர்.
இப்படம் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானநிலையில், உலகம் முழுவதும் ரூ,1,100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்த வெற்றியை தொடர்ந்து, கல்கி 2898 ஏடி படம் அடுத்த மாதம் 3-ம் தேதி ஜப்பானிலும் வெளியாக உள்ளது.
இதற்கான புரமோஷன் பணிக்காக இயக்குனர் நாக் அஸ்வினுடன் பிரபாஸும் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரபாஸ் ஜப்பான் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அதன்படி, பிரபாஸ் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பின்போது அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பிரபாசின் ஜப்பான் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ஜப்பானில் உள்ள அவரது ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருந்தாலும், பிரபாஸ் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.