'காதல் என்பது பொதுவுடைமை' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்
|இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காதல் என்பது பொதுவுடைமை' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதல் என்பது பொதுவுடைமை'. இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த இப்படம் வருகிற பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
'ஜெய் பீம்' நடிகை லிஜோ மோள் ஜோஸ் கதையின் நாயகிகளுள் ஒருவராக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தன்பாலின சேர்க்கையாளர்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மேன்கைன்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.
இப்படத்தை பிரபல மலையாள இயக்குநரான ஜியோ பேபி தயாரித்துள்ளார். நவீன காதல் கதையைப் பேசும் படமாக உருவான இது கடந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.