< Back
சினிமா செய்திகள்
புதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருதை பெறும் காதல் தி கோர்
சினிமா செய்திகள்

புதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருதை பெறும் 'காதல் தி கோர்'

தினத்தந்தி
|
11 Dec 2024 4:57 PM IST

ஜோதிகா மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த 'காதல் - தி கோர்' படத்திற்கு புதுச்சேரி அரசு விருது வழங்க உள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களான ஜோதிகா மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த படம் 'காதல் - தி கோர்'. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்காக ஜோதிகா 14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மலையாள படத்தில் நடித்தார். இப்படத்திற்கு மேத்யூஸ் புலிக்கன் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் நடிகர் மம்முட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருந்தது பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் சிறந்த படத்துக்கான விருது 'காதல் தி கோர்' என்ற படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை வரும் 13ஆம் தேதி நடைபெறும் விழாவில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்க உள்ளார். இதனை படத்தின் இயக்குனர் ஜியோ பேபி பெற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்