படத்தை பார்க்க மூன்று காரணங்களை கூறிய 'கா' பட நடிகரின் மனைவி
|'கா' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் நாக சைதன்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
ஐதராபாத்,
சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கா'. இவர்கள் இயக்கும் முதல் படம் இதுவாகும். இப்படம் நாளை தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றது. இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், தன்வி ராம் மற்றும் நயன் சரிகா என இரண்டு கதாநாயகிகளும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஐதாராபாத்தில் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாக சைதன்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய நடிகர் கிரணின் மனைவி ரஹஸ்யா கோரக், தனது கணவரின் கடின உழைப்பிற்காக படத்தை பார்க்குமாறு ரசிகர்களையும் பார்வையாளர்களையும் கேட்டுக் கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
"நீங்கள் ஏன் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்கு என்னிடம் மூன்று காரணங்கள் உள்ளன. முதல் காரணம், உங்களுக்காக. மன அழுத்தம் நீங்க, பிரச்சினைகளை மறக்க, பொழுதுபோக்க நல்ல படம் இது. இரண்டாவது காரணம், படக்குழுவிற்காக. மொத்தக் குழுவும் மிகவும் கடினமாக உழைத்து, படத்தைத் தயாரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். மூன்றாவதாக, என் கணவருக்காக. அவரின் உழைப்பிற்காக படத்தைப் பாருங்கள்' என்றார்.