'ஜாலியோ ஜிம்கானா': விமர்சனத்திற்குள்ளான 'போலீஸ்காரனை கட்டிகிட்டா' பாடல்
|கடந்த 25-ம் தேதி இப்படத்தின் முதல் பாடலான 'போலீஸ்காரனை கட்டிகிட்டா' வெளியானது.
சென்னை,
நடிகர் விஜய்யின் 'கோட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபு தேவா, தற்போது சக்தி சிதம்பரம் இயக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். இவர்களுடன், யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைக்க கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். படத்தினை டிரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலானது.
அதனைத்தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி இப்படத்தின் முதல் பாடலான 'போலீஸ்காரனை கட்டிகிட்டா' வெளியானது. இப்பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார். இந்நிலையில், இப்பாடல் வைரலானதையடுத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இப்பாடலில் இரட்டை அர்த்தம் உள்ள வரிகள் உள்ளதாக கூறி ரசிகர்கள் பாடலாசிரியரையும் தயாரிப்பாளர்களையும் சாடி வருகின்றனர்.