பாடல் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் வெளியேறிய 'ஜாலியோ ஜிம்கானா' பட இயக்குநர்
|பிரபு தேவா நடித்த ஜாலியோ ஜிம்கானா' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'பேட்ட ராப்'. இதனை தொடர்ந்து, நாயகனாக 'மூன் வாக்' திரைப்படத்திலும் பிரபுதேவா நடிக்கிறார். பிரபுதேவா தமிழில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விஜய்யின் 'கோட்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சக்தி சிதம்பரம் இயக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைக்க கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். படத்தினை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆண்ட்ரியா குரலில் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் 'போலீஸ் காரனை கட்டிகிட்டா' பாடல் சமீபத்தில் வெளியானது. பாடல் வரிகள் இரட்டை அர்த்தமாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. மேலும் இந்தப் பாடலை ஜெகன் கவிராஜ் எழுதியதாக சொல்லப்படும் நிலையில் பாடலின் லிரிக் வீடியோவில் படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால் யார் பாடல் எழுதினார் என்ற கேள்வியும், ஜெகன் கவிராஜின் உழைப்பை சக்தி சிதம்பரம் திருடிவிட்டாரா என்றும் சர்ச்சைகள் உருவானது.
இயக்குநர் சக்தி சிதம்பரம், "பாடல் செம ஹிட். சமூக வலைத்தளங்கள்ல வர்ற விமர்சனங்களைப் பற்றி நான் கவலையே படல. மக்கள் இந்த பாடலை விரும்பி கேட்கிறாங்க. ஒரு பெண் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை இப்படியெல்லாம் இருக்கணும்னு சொல்றதுதான் இந்த பாடல். இது டபுள் மீனிங், டிரிப்ள் மீனிங்காக இருக்குனு சொல்ற விஷயங்களுக்குள்ள நான் போகல" என்றார்.
இந்த நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பாடல் தொடர்பாக படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்காமல் சக்தி சிதம்பரம் பாதியிலேயே வெளியேறினார்.
பின்பு நிகழ்ச்சிக்கு வந்த ஜெகன் கவிராஜ் மேடை ஏறி "இந்தப் படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் இருந்தார். அவருக்கும் இயக்குநருக்கும் செட் ஆகாததால் அவர் வெளியேறிவிட்டார். 'போலீஸ்காரன கட்டிக்கிட்டா...' பாடல் உருவான விதத்தை சொல்கிறேன். சிவப்பு சூரியன் படத்தில் சில்க் ஸ்மிதா 'நான் கண்டா கண்டா...' பாடலுக்கு நடனமாடியிருப்பார். அதில் 'போலீஸ்காரன கட்டுனா அடிப்பான், டாக்டர கட்டுனா...' போன்ற வரிகள் வரும். அதே சமயம் மலையாளத்தில் ஹிட்டான ஒரு பாடலின் ட்யூனை இசையமைப்பாளருக்கு அனுப்பினோம். என்னுடன் இயக்குநர் சக்தி சிதம்பரம், இணை இயக்குநர் காமராஜ் என்பவர் இருந்தார். காமராஜ் தான் இந்தப் பாடல் உருவாகுவதற்கு மூல காரணம். அந்த மலையாளப் பாடலை இன்ஸ்பிரஷேனாக எடுத்துக் கொண்டு எங்க படத்தின் இசையமைப்பாளர் ஒரு டியூன் கொடுத்தார் அந்த டியூனுக்கு வார்த்தை எழுதினேன். நான் எப்போதுமே பாட்டு எழுதி முடித்த பின் நேரடியாக இசையமைப்பாளரிடம் கொடுக்க மாட்டேன். இயக்குநர் வழியாகத்தான் அது போகும். அப்படி இயக்குநர் வழியாகத்தான் இந்த பாட்டு வரிகள் இசையமைப்பாளருக்குப் போனது.
படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் நான் வேலை செய்தேன். படத்தின் பட்ஜெட் ரூ.8 கோடியில் ஆரம்பித்து ரூ.15 கோடியை கடந்து போனது. அதை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அதனால் இயக்குநர் பாடலில் என் பெயரை போட மாட்டேன் என சொல்லிவிட்டார். ஏற்கனவே ரூ.15 கோடி செலவு பண்ணியிருக்கிறோம். வியாபாரம் பிரச்சனை இருக்கிறது என்பதற்காக அமைதியாக இருந்தேன். ஆனால் இன்றைக்கு உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது" என்றார்.