< Back
சினிமா செய்திகள்
4வது கணவரையும் விவாகரத்து செய்த ஜெனிபர் லோபஸ்

கோப்புப்படம்

சினிமா செய்திகள்

4வது கணவரையும் விவாகரத்து செய்த ஜெனிபர் லோபஸ்

தினத்தந்தி
|
21 Aug 2024 6:21 PM IST

ஹாலிவுட் நட்சத்திரங்களான பென் அப்லெக்-ஜெனிபர் லோபஸ் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் பென் அப்லெக். பியர்ல் ஹார்பர், ஆர்கோ, கான் கேர்ள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், குறிப்பாக 2016ம் ஆண்டு பேட்மேன் vs சூப்பர்மேன்: டான் ஆப் ஜஸ்டிஸ் படத்தில் பேட்மேனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.

அதேபோல 'அனகொண்டா' படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் ஜெனிபர் லோபஸ். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 'தி மதர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த சூழலில் பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியும், தொழில் அதிபருமான ஜெனிபர் லோபசும், ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக்கும் காதலித்து கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இது ஜெனிபர் லோபசின் நான்காவது திருமணமாகும்.

இந்நிலையில் நடிகர் பென் அப்லெக்-ஜெனிபர் லோபஸ் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெனிபர் லோபசுக்கும், பென் அப்லெக்கிற்கும் திருமணமாகி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவந்தநிலையில், பென் அப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கேட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் ஜெனிபர் லோபஸ் மனு தாக்கல் செய்துள்ளார். பென் அப்லெக்கிடம் இருந்து எந்த ஒரு ஜீவனாம்சமும் வேண்டாம் என்று நீதிமன்றத்தில் ஜெனிபர் லோபஸ் தெரிவித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிபர் லோபசுக்கு அவருக்கு முந்தைய திருமணம் மூலம் இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த பிள்ளைகளுக்கு தற்போது 16 வயதாகிறது. பென் அப்லெக்கிற்கு முந்தைய திருமணம் மூலம் வயலட், செராபினா, சாமுவேல் என மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஜெனிபர் லோபசுக்கு முன்பு நடிகை ஜெனிபர் கார்னரை, பென் அப்லெக் காதலித்து மணந்து, பிரிந்திருந்தார்.

இதனிடையே திருமண நாளில் விவாகரத்து கேட்கும் அளவுக்கு அவர்களுக்கு இடையே அப்படி என்ன தான் பிரச்சனை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்