'அது இன்னும் நிறைவேறாத கனவாகவே உள்ளது' - தயாரிப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா
|மணீஷ் மல்ஹோத்ரா தனது முதல் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.
மும்பை,
பிரபல ஆடை வடிவமைப்பாளரும், தயாரிப்பாளருமானவர் மணீஷ் மல்ஹோத்ரா. இவர், மறைந்த நடிகை மீனா குமாரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இது இவர் இயக்கவிருக்கும் முதல் படம் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இதில் நடிகை கிருத்தி சனோன், மீனா குமாரியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மணீஷ் மல்ஹோத்ரா, வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'நான் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதில்லை. வேறு ஏதாவது ஒன்றை இயக்க விரும்புகிறேன். ஆனால், இயக்குவது என்பது இன்னும் நிறைவேறாத கனவாகவே உள்ளது' என்றார்.
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான, வெற்றிகரமான நட்சத்திரங்களில் ஒருவர் மறைந்த நடிகை மீனா குமாரி. இவர், தில் அப்னா அவுர் ப்ரீத் பராய், பியார் கா சாகர், சாஹிப் பீபி அவுர் குலாம், ஆர்த்தி, தில் ஏக் மந்திர், நூர்ஜெஹான் மற்றும் பகீசா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் கடந்த 1972-ம் ஆண்டு உயிரிழந்தார்.