'அது நான் இல்லை' - இயக்குனரின் புகாரை தொடர்ந்து விஜய் ஆண்டனி பதிவு
|மழை பிடிக்காத மனிதன் படத்தின் தொடக்கத்தில் வரும் காட்சி எப்படி வந்தது என்று தெரியவில்லை என இயக்குனர் புகார் தெரிவித்திருந்தார்
சென்னை,
'கோலி சோடா', 10 எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் விஜய் மில்டன். இவர் தற்போது விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த 2-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சமீபத்தில், இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன், படத்தின் தொடக்கத்தில் வரும் ஒரு நிமிட காட்சி ஒன்றை தான் வைக்கவில்லை என்றும் அது எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றும் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
'மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை இது சலீம் 2 இல்லை, ' என்று தெரிவித்துள்ளார்.