வாழ்க்கை வரலாற்றை ரஜினிகாந்த் எழுத உள்ளதாக தகவல்
|ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு முழுமையாக டிசம்பருக்குள் முடிக்க படக்குழு தயாராகி வருகிறது. இதனை முடித்துவிட்டு ஜனவரியில் இருந்து 'ஜெயிலர் 2' படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினிகாந்த். இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
'ஜெயிலர் 2' முடித்துவிட்டு, தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுய சரிதை குறித்து தனது நண்பர்களுடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே தனது வாழ்க்கை வரலாற்றை ரஜினிகாந்த் எழுத தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 'ஜெயிலர் 2' முடித்துவிட்டு, தனது பண்ணை வீட்டில் வைத்து இதனை எழுத உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ரஜினி - பாலசந்தர் உரையாடல் ஒன்றில் "வாழ்க்கை வரலாற்றை எழுத மாட்டேன். அதில் உண்மையை எழுத வேண்டும்" என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இப்போது வாழ்க்கை வரலாற்றை ரஜினிகாந்த் எழுத முடிவு எடுத்திருப்பது திரையுலகினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950 அன்று பெங்களூரில், அப்போதய மைசூர் மாநிலத்தின் (தற்போதைய கர்நாடகா) கீழ் பிறந்தார். ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அவர் தனது 5 வயதில் தனது தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆச்சார்ய படசாலாவிலும், பின்னர் ராமகிருஷ்ணா மிஷனின் ஒரு பிரிவான விவேகானந்த பாலாக் சங்கத்திலும் பள்ளிப்படிப்பைப் பெற்றார்.
அவரது தாய்மொழி மராத்தி. சினிமா உலகில் அறிமுகம் ஆகி, அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற பயணம் எளிதானது அல்ல. திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, பெங்களூரில் உள்ள கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பஸ் நடத்துனராக ரஜினிகாந்த் பணியாற்றினார். இந்த நேரத்தில்தான் அவர் பல்வேறு மேடை நாடகங்கள் மற்றும் ஸ்டண்ட் நிகழ்ச்சிகளில் நடித்து தனது நடிப்பு ஆர்வத்தை வளர்த்தார்.
இந்திய சினிமாவில் அவரது நீண்ட மற்றும் வளமான வாழ்க்கைக்காக ரஜினிகாந்த் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றார், பிளிம் பேரின் சிறந்த நடிகருக்கான விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், கலைமாமணி விருதுகள், இந்திய சினிமாவில் சிறந்து விளங்கிய செவாலியர் சிவாஜி கணேசன் விருது, பத்ம- பூஷண் மற்றும் பத்ம-விபூஷன் விருதுகளை பெற்றுள்ளார்.
இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோருடன் நடித்து நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டு அவர் கன்னட திரைப்படமான கத சங்கமா படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.