
ஆங்கிலத்திலும் வெளியாகிறதா 'ஜெயிலர் 2'?

சமீபத்தில் ஜெயிலர் 2 படத்திற்கான அறிவிப்பு டீசர் வெளியாகி வைரலானது.
சென்னை,
கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சமீபத்தில் ஜெயிலர் 2 படத்திற்கான அறிவிப்பு டீசர் வெளியாகி வைரலானது. தற்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருவதால் ஏப்ரல் மாதம் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைவார் என்று தெரிகிறது.
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பை வெளி மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் நடத்த இயக்குனர் நெல்சன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பான் இந்திய மொழிகளுடன் ஆங்கிலத்திலும் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், வெளிநாடுகளில் பல திரைகளில் இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.