< Back
சினிமா செய்திகள்
மகாராஜா படத்தை நிராகரிக்க பாக்யராஜ் காரணமா? - நடிகர் சாந்தனு விளக்கம்
சினிமா செய்திகள்

'மகாராஜா' படத்தை நிராகரிக்க பாக்யராஜ் காரணமா? - நடிகர் சாந்தனு விளக்கம்

தினத்தந்தி
|
22 Aug 2024 2:46 PM IST

'மகாராஜா' திரைப்பட வாய்ப்பை நடிகர் சாந்தனு நிராகரித்தார் என்ற தகவல் பரவி வந்த நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் நடிகர் சாந்தனு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

'குரங்கு பொம்மை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானாவர் நித்திலன் சுவாமிநாதன். முதல் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்நிலையில், நித்திலன் இயக்கிய இரண்டாவது திரைப்படமான 'மகாராஜா' பெரும் வரவேற்பைப் பெற்றது. மகாராஜா படத்தின் திரைக்கதை மூலம் நித்திலன் இந்திய அளவில் பிரபலமடைந்தார். அதற்கு முதல் காரணமாக பார்க்கப்படுவது, அப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் யூகிக்க முடியாத திரைகக்கதை. மிகவும் சாதாரண கதைக்கு, திரைக்கதை மூலம் வித்தியாசம் காட்டி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். இந்நிலையில் 2024 ல் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.

இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "மகாராஜா படத்தின் கதையை பல நடிகர்களிடம் கூறினேன். நடிகர் சாந்தனுவிடம் கூறிய போது அவருக்கு பிடித்திருந்தது. அவருடன் சேர்ந்து பல தயாரிப்பாளர்களை அணுகினேன். ஆனால் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனது முதல் படமாக குரங்கு பொம்மையை இயக்கினேன். இரண்டாவதாக மகாராஜா படத்தை இயக்கினேன்" என கூறியுள்ளார்.

"மகாராஜா போல் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததற்கு இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி. என்னை முதலில் இந்த கதைக்கு தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதேபோல் 10 வருடம் கடந்த பின்பும், என்னை அங்கீகரித்து நான் இந்த கதையைக் கேட்டேன் என கூறியதற்கு நன்றி. மேலும், இந்த படத்தை நிராகரிக்க என் அப்பாவோ இல்லை நானோ காரணம் இல்லை. அப்பாவிற்கு இயக்குநர் என்னிடம் வந்து கதை சொன்னது தெரியாது. அந்த சமயத்தில் தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அதனால் தான் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. நான் எப்போதும் நல்ல கதைகளைக் கேட்க ஆவலாக உள்ளேன். அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்