அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவை ஈர்த்த இந்திய திரைப்படம்
|கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. இவர் இந்த (2024) ஆண்டு வெளியான திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பட்டியலிட்டுள்ளார். இந்த பட்டியலில் பாயல் கபாடியா இயக்கிய 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான படம் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்". இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் டிண்டுமால் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு இரண்டாவது உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்றது. இது மட்டுமில்லாமல் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கும் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 82 வது கோல்டன் குளோப் விருதுகள் விழா அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் உருவான சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பிரிவுகளில் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" பரிந்துரைக்கப்பட்டுள்ளது.