நானி தயாரிக்கும் சிரஞ்சீவி படத்தில் கதாநாயகி கிடையாதா? - வெளியான முக்கிய தகவல்
|'விஸ்வம்பரா' படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.
சென்னை,
சிரஞ்சீவி தற்போது 'விஸ்வம்பரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இப்படத்தை தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை நடிகர் நானி, எஸ்எல்வி சினிமாஸின் சுதாகர் செருகுரியுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திலிருந்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, முன்னதாக இப்படத்தில் பாடல்களும், நடிகையும் கிடையாது என்று இணையத்தில் பரவி வந்த தகவலை எஸ்எல்வி சினிமாஸின் தயாரிப்பாளர் சுதாகர் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'சமூக ஊடகங்களில் இப்படத்தில் பாடல்களும், நடிகையும் கிடையாது என்று பரவி வரும் விஷயங்களில் எந்த உண்மையும் இல்லை. நாங்கள் தற்போது ஒளிப்பதிவு மற்றும் இசையமைப்பாளரை தேர்வு செய்துள்ளோம். கதை வளர்ச்சி நிலையில் உள்ளது' என்றார்.