< Back
சினிமா செய்திகள்
நான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி பதிவு
சினிமா செய்திகள்

"நான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன்" - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி பதிவு

தினத்தந்தி
|
23 Oct 2024 9:54 PM IST

துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை,

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். அவரது நடிப்பில் வௌியான 'சீதா ராமம்' திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த கிங் ஆப் கோதா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை.

இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் 'லக்கி பாஸ்கர்'. வெங்கி அட்லுரி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார்.இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இப்படம் வரும் 31 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இப்படத்தின் புரமோஷன் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துல்கர் சல்மான், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னுடைய படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்வமாக இருக்கிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை கேட்கும்போதே எனக்கு மிகவும் பிடித்தது. அப்பா, அம்மா, குழந்தை என பலரும் இருக்கும் குடும்பத்தில் பாஸ்கர் கதாபாத்திரம் கடன் நெருக்கடியால் அவதிப்படுகிறார். இப்படியிருக்கும்போது சூழ்நிலைக்காக ஒரு விஷயத்தில் தள்ளப்படுகிறார். இது தான் கதை. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

தீபாவளிக்கு நிறைய படங்கள் வருகிறது. 'அமரன்', 'பிரதர்' படங்கள் வருகிறது. அனைத்து படங்களும் வெற்றி பெறவேண்டும். 'லக்கி பாஸ்கர்' படத்துக்கும் வாய்ப்பு கொடுங்கள்" என்றார். மேலும் "நான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியும் கூட, அஜித்தை வைத்து இயக்க ஆசைப்படுகிறார். அஜித்தின் 'மங்காத்தா' திரைப்படம் எனக்கு பிடித்த படம்" என அந்த நிகழ்ச்சியில் கூறினார்.

மேலும் செய்திகள்