புதிய யூடியூப் சேனலை துவங்கிய இளையராஜா !
|இளையராஜா பின்னணி இசையை பதிவேற்ற அதிகாரபூர்வமாக யூடியூப் சேனலை துவங்கி உள்ளார்.
சென்னை,
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் இவரது இசையில் வெளியான 'ஜமா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீப காலமாக வெளியான பல படங்களில் இவரது பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இளையராஜா இசை கச்சேரிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் தான் இசையமைத்த படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்களில் பின்னணி இசையை பதிவேற்ற அதிகாரபூர்வமாக யூடியூப் சேனலை துவங்கி உள்ளார். அந்த சேனலுக்கு இளையராஜா பிஜிஎம்'எஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சேனல் குறித்த புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.